கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியில் வரதட்சனை கொடுமையால் திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை. மகளின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோபி கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.


பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பர்கத் பானு. உணவகம் ஒன்றில் வேலை செய்து வரும் இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் அன்சர் பாஷா, கருத்து வேறுபாடு காரணமாக மனைவி, மகள்களை பிரிந்து சென்ற நிலையில் பர்கத் பானு உணவகம் ஒன்றில் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.
இந்நிலையில் இவரது முதல் மகளுக்கு திருமணமான நிலையில் இரண்டாவது மகள் ரிஜ்வானாவை கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியை சேர்ந்த நூர் அலி என்பவரது மகன் அபுஉசேனுக்கு கடந்த மே மாதம் திருமணம் செய்து கொடுத்தார். அபு உசேன் கார் மெக்கானிக் ஒர்க்ஷாப் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
திருமணத்தின் போது, அபுஉசேனும் அவரது குடும்பத்தினரும் 10 சவரன் நகை, பீரோ, கட்டில், வாசிங்மெஷின் என அனைத்து பொருட்களையும் சீதனமாக கேட்டு உள்ளனர்.
ஆனால் பர்கத்பானு குடும்ப சூழ்நிலையை கூறி, முதல் கட்டமாக 4 சவரன் நகையும் கட்டில் உள்ளிட்டவைகளை சீதனமாக வழங்கி உள்ளார்.
மேலும் ரிஜ்வானாவிற்கு சரி வர உணவு கொடுக்காமலும், சமையல் செய்யவும் விடாமல் கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரிஜ்வானா கடந்த மாதம் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பின்னர் அபு உசேனின் உறவினர்கள் பள்ளி வாசல் நிர்வாகிகள் பர்கத்பானுவிடம் மகளை அனுப்பி வைக்குமாறும், இனி இது போன்ற நடக்கமால் பார்த்துக்கொள்வதாக உறுதி கூறி உள்ளனர். அதைத்தொடர்ந்து மகளை சமாதானம் செய்து கணவன் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் கணவன் வீட்டிற்கு சென்ற ரிஜ்வானாவிற்கு மீண்டும் வரதட்சணை கொடுமை நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரிஜ்வானா கடந்த 14ம் தேதி கணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதுகுறித்து கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், வரதட்சணை கொடுமையால் அவர் இறந்த்து இருப்பதாகவும், அவரது சாவிற்கு காரணமன அபு உசேன். அவரது தந்தை நூர் அலி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோபி கோட்டாட்சியர் கண்ணப்பன் மற்றும் கோபி டி.எஸ்.பியிடம் பர்கத் பானு மற்றும் அவரது உறவினர்கள் மனு அளித்தனர்.