நம்பியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழையால் நம்பியூரில் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது

நம்பியூர் மற்றும் சத்தியமங்கலத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு படகுடன் 14 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

கோபி அருகே உள்ள நம்பியூர் மற்றும் அதை சுற்றி உள்ள மலையப்பாளையம், வேமாண்டம்பாளையம், சாவக்கட்டு பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாகவே இரவு நேரங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.முதல் நாள் பெய்த கனமழைக்கே நம்பியூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பிய நிலையில் உபரி நீர் வெளியேறி வந்தது.


இந்நிலையில் நேற்று முன்தினமும் அதைத் தொடர்ந்து நேற்று இரவும் மூன்றாவது நாளாக சுமார் 4 மணி நேரம் கனமழை பெய்தது.
ஏற்கனவே குளங்கள் அனைத்தும் நிரம்பி இருந்த நிலையில் குளங்களுக்கு வருகை தந்த உபரி நீர் முழுமையாக வெளியேறியதால் நம்பியூர் பேருந்து நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பெரியார்நகர், சி.எஸ்.ஐ வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை புகுந்தது.

இதில் பெரியார் நகரில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. அதைத்தொடர்ந்து வீடுகளில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள பள்ளிக்கூடம், சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், அரிசி, பருப்பு, துணி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் மழை நீரில் மூழ்கி வீணாகியது.


மழை நீர் ஓடையில் இருந்த தண்ணீர் நம்பியூர் பேருந்து நிலையத்திற்குள்ளும் அருகில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளுக்குள் புகுந்ததோடு, பேருந்து நிலையம் முன்பு சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் சென்றதால் கோபி – கோவை சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் மழை நீர் குடியிருப்புக்குள் புகுந்ததை தொடர்ந்தும், பேருந்து நிலையம் அருகே உள்ள செட்டியாம்பதி குளத்தில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேறியதால் உடனடியாக நம்பியூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் 14 பேர் வரவழைக்கப்பட்டு உடனடியாக மீட்பு படகு மற்றும் லைப் ஜாக்கெட்டுடன் பேருந்து நிலையம் அருகே இரு குழுக்களாக தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.

மீட்பு படகு மூலமாக ஒரே நேரத்தில் 12 பேர் வரை மீட்க முடியும் என்ற நிலையில் 15 லைப் ஜாக்கெட்டுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
மழை நீர் ஓடைகளில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மரங்கள், தெர்மாகூல், பிளாஸ்டிக் பொருட்கள் காரணமாக மழை நீர் வெளியேற வழியில்லாமல் நம்பியூர் பேருந்து நிலையம், கடைகள், பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிக்குள் புகுந்தது.
இதனால் மழை நீர் வெளியேற வழியில்லாத நிலையில் பேரூராட்சி அலுவலகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. பேரூராட்சி அலுவலகம் அருகே இருந்த டிரான்ஸ்பர்மர் அடிப்பாகம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில், அந்தரத்தில் தொங்கியது.
அதைத்தொடர்ந்து நேற்று காலை மின்வாரிய ஊழியர்கள் தொங்கிய டிரான்ஸ்போர்மரை சரி செய்தனர். அதேபோன்று சுமார் 10 அடி ஆழமுள்ள மழைநீர் ஓடையில் இருந்த ஆக்கிரமிப்புகள், ஏணி வைத்து உள்ளே இறங்கி அடைப்புகளை பேரூராட்சி ஊழியர்கள் சரி செய்தனர்.
செட்டியாம்பதி குளத்தில் இருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேறி வருவதாலேயே மழை நீர் பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சூழ்ந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த பகுதிகளை பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் பார்வையிட்டு பணிகளை தீவிரப்படுத்தினார்.
அதே போன்று பழனிக்கவுன்டன்புதூர் பகுதியில் இருந்த குளம் நேற்று முன்தினம் நிரம்பியதை தொடர்ந்து அதிக தண்ணீர் வரவே, குளத்தின் கரை உடைந்து குளத்தில் இருந்த தண்ணீர் முழுமையாக வெளியேறியது. இதனால் பழனிக்கவுண்டன்புதூரில் இருந்து கெடாரை செல்லும் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது.
அதே போன்று நம்பியூர் பெரியார் நகரில் பாக்கியம்மாள் என்பவரது வீடும், செட்டியாம்பதியில் பூவாத்தாள் என்பவரது வீடும் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாத நிலையில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
அதே போன்று மலையப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் கனமழையால் இடிந்து விழுந்தது. பள்ளி விடுமுறை என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உடைந்து விழுந்த இடத்தின் அருகே உள்ள பயன்பாடு இல்லாத கழிப்பிடமும் உடைந்து விழும் அபாயத்தில் இருப்பதால், உடனடியாக இடித்து அகற்ற பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே போன்று அழகம்பாளையம் கிராமத்தில் எம்மாம்பூண்டி – சாவக்காட்டுப்பாளையம் சாலையில் கனமழையால் சாலை முழுமையாக சேதமடைந்தது. இதனால் இரு கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
அதே போன்று குப்பிபாளையம் பாப்பாங்குட்டை நிரம்பி வெளியேறிய உபரி நீர் அந்த பகுதியில் உள்ள 25 வீடுகளை சூழ்ந்தது. அதைத்தொடர்ந்து வீடுகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.