கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ்.டி.என்.காலனியை சேர்ந்தவர் மணிகண்டன்(29). இவர் நல்லகவுண்டன் பாளையத்தில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 26ம் தேதி வீட்டின் முன்பு பைக்கை நிறுத்தி விட்டு சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்த போது, பைக் திருடு போயிருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து மணிகண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கு இருந்த சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து பைக் கொள்ளையரை தேடி வந்தனர்.இந்நிலையில் கோபி அருகே உள்ள முருகன்புதூரில் கோபி போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அந்த வழியாக பைக்கில் வந்த நான்கு பேரை நிறுத்தி விசாரணை செய்த போது, மணிகண்டனின் பைக்கை திருடியது அவர்கள் தான் என்பது தெரிய வந்தது.பின்னர் பைக் திருடிய திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள படியூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த அஜித் என்கிற சிவலிங்கம்(22), காங்கேயம் அருகே உள்ள நல்லூரை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த தாமஸ் குட்டி என்கிற தாமு (20), கோபி அருகே உள்ள முருகன்புதூரை சேர்ந்த சதீஸ்குமார்(23), திருப்பூர் ஜெய்நகரை சேர்ந்த பிரித்விராஜ் (22) ஆகியோரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நண்பர்கள் என்பதும், திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய பகுதிகளில் வாகன திருட்டில் ஈடுபட்டு சிறை சென்றவர்கள் என்பதும், சிறையில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன் விடுதலையான நான்கு பேரும், கோபியில் கைரிசையை காட்டிய போது போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர்.அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.