
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையானது பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அணையாகும். சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் விழுவதாலும்,பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதோடு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குளிக்க முடியும் என்பதால் ஒவ்வொரு அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் இங்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கன மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்று காலை அணையின் நீர்மட்டம் 99 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதும் 3,000 முதல் 10,000 கன அடி வரை தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர். இந்த தடை உத்தரவானது மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்றும் அதுவரை சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமின்றி பவானி ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைத்தல், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லுதல், பரிசல் பயணம் செய்தல் ஆகியவற்றிற்கும் தடை விதித்து உள்ளனர்.
பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ள நிலையில் அதன் வழியோரங்களில் உள்ள பங்களாபுதூர், வாணிப்புத்தூர், அடசப்பாளையம், மேவாணி, கொடிவேரி, நஞ்சை புளியம்பட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வருவாய்த்துறையினர் மற்றும் பங்களாபுதூர், கோபி, கடத்தூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
அதே போன்று நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் கொடிவேரி அணை மற்றும் படித்துறைகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், ஒலி பெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.