கோபி அருகே உள்ள வாணிப்புத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை, தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த வளர்ப்பு நாயை தாக்கி கொன்ற சிசிடிவி காமிரா பதிவு வைரலாகி வருகிறது.கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் அடுத்த கவுண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. விவசாயியான இவர் வாணிப்புத்தூர் பேரூராட்சி துணைத்தலைவராகவும் உள்ளார். இவருக்கு அதே பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது.

இங்கு கால்நடைகளை பாதுகாக்க வளர்ப்பு நாயை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கால்நடைகளை கொட்டகையில் அடைத்து விட்டு அருகிலேயே காவலுக்காக வளர்ப்பு நாயை கட்டி வைத்து உள்ளார்.

நேற்று காலை கருப்புசாமி வழக்கம் போல் கால்நடைகளை மேய்ச்சலுக்காக கொண்டு செல்ல வந்த போது, நாயை மர்ம விலங்கு கடித்து கொன்று இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதைத்தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காமிரா பதிவுகளை பார்த்த போது நள்ளிரவில் அங்கு வந்த சிறுத்தை ஒன்று நாயை தாக்கி கொன்று இருப்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த கருப்புசாமி, இதுகுறித்து டி.என்.பாளையம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளார். கிராமத்திற்குள் புகுந்து வளர்ப்பு நாயை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் கிராமத்திற்குள் புகுந்துள்ள சிறுத்தையை பிடித்து அப்புறப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.