கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிச்செவியூரில், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உள்ளது. இங்கு 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் சந்திரசேகரன்(59). இவர் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் பள்ளி தலைமையாசிரியர் முருகனிடம் புகார் செய்தனர். அதைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர், மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் இதுகுறித்து மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பவம் உண்மை என தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து தலைமையாசிரியர் முருகன் கோபி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் வேதியில் ஆசிரியர் சந்திரசேகரன் மீது கடந்த நவம்பர் மாதம் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்தநிலையில், சந்திரசேகரன் கர்நாடகா மாநிலம், சாம்ராஜ்நகரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்பெக்டர் நாகமணி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சந்திரசேகரனை கைது செய்தனர்.