கோபிசெட்டிபாளையம் அருகே விவசாய தோட்டத்தில் மூலிகை செடிகளுடன் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சித்த வைத்தியர் மற்றும் அவரது மகனை கைது செய்த மதுவிலக்கு காவல்துறையினர் 11 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்


கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள எலத்தூர் செட்டிபாளையம் ஆத்திக்காடு பகுதியில் விவசாய தோட்டத்தில் கஞ்சா செடிகள் வளர்ப்பதாக கோபி மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது
ரகசிய தகவலின்படி அங்கு சென்ற மதுவிலக்கு காவல்துறையினர் சித்த வைத்தியர் மாரப்பன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் சோதனை செய்துள்ளனர், அப்போது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த சோளப் பயிர் மற்றும் மூலிகை செடிகளுக்கு நடுவில் கஞ்சா செடி இருப்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து கோபி மதுவிலக்கு காவல் துறையினர் விவசாய தோட்டத்தில் வளர்த்த 11 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர், பின்னர் எலத்தூர் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் மனு பெற்று விவசாய தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்த சித்த வைத்தியர் மாரப்பன்(80) மற்றும் அவரது மகன் கருப்புசாமி ஆகியோரை மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்
விசாரணையில் மாரப்பன் சித்த மருத்துவ தொழில் செய்து வருவதால் தனது தோட்டத்தில் வளர்த்து வந்த மூலிகை செடிகளுடன் கஞ்சா செடிகளையும் வளர்ப்பது தெரியவந்தது, பின்னர் கைது செய்த இருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.