நம்பியூர் அருகே உள்ள அளுக்குளி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபா கூட்டத்தில் பள்ளி மாணவர்கள் தங்கள் பகுதிக்கு தார் சாலை வேண்டியும், அங்கன்வாடி கட்டிடத்தின் முன்பு உள்ள வடிகாலினை மாணவர்கள் பாதுகாப்பாக சென்று வரும் வகையில் மூடி தரவும் கோபி சார் ஆட்சியரிடம் மனு அளித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.


நம்பியூர் அடுத்துள்ள அளுக்குளி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை ஒட்டி சிறப்பு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி பாண்டுரங்கன், துணைத் தலைவர் ஜெயமணி மற்றும் அரசு அதிகாரிகள் தலைமையில், அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள அரசு ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்றது.


இந்த கிராம சபை கூட்டத்தில் அளுக்குளி ஊராட்சியில் பொது நிதி செலவினம் மற்றும் திட்டப் பணிகள் குறித்து 2023-24 ஆம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கைகளை கிராம சபையில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, வளர்ச்சி திட்ட பணிகள் மாற்று மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமை திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது,இதில் கோபி சார் ஆட்சியர் சிவானந்தம், கோபி வருவாய் வட்டாட்சியர் சரவணன் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டிருந்து மனுக்களை பெற்றார். தொடர்ந்து இந்த கிராம சபை கூட்டத்தில் அப்பகுதி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு கொள்ளுமேட்டுகாலனியில் தார் சாலை அமைத்து தரக் கோரியும், அதே பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி முன்புறம் உள்ள வடிகாலினை மாணவர்கள் பாதுகாப்பாக சென்று வரும் வகையில் மூடித்தரக்கோரியும் மனு அளித்தனர்.சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பள்ளி மாணவர்கள் அளித்த மனு, அங்கிருந்து அரசு அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர் தமிழரசி, பொதுமக்கள் என அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்தது.