

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எலத்தூர் நாகமலையை சேர்ந்தவர் லிங்குசாமி(68). விவசாயி. இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், ஆறுமுகம், விஸ்வநாதன் என்ற இரு மகன்கள் உள்ளனர். ஆறுமுகம் திருப்பூரில் தங்கி வேலை செய்து வருவதால் திருப்பூரில் மகனுடன் ஈஸ்வரி தங்கி உள்ளார். விஸ்வநாதன் அபுதாபியில் வேலை செய்து வருகிறார்.
நாகமலை தோட்டத்தில் உள்ள வீட்டில் லிங்குசாமியும் அவரது மனைவியின் தங்கை விஜயலட்சுமியும் இருந்து உள்ளனர். நேற்று இரவு அங்கு வந்த கும்பல் ஒன்று வீட்டின் முன்பு அமர்ந்து இருந்த விஜயலட்சுமியை உருட்டுகட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளனர்.
விஜயலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த லிங்குசாமியையும் அந்ந கும்பல் உருட்டு கட்டையால் தாக்கி உள்ளது.
இதில் இருவரும் படுகாயமடைந்து அலறியதை்தொடர்ந்து அந்த கும்பல் அங்கு இருந்து தப்பியோடியது.
இந்நிலையில் நீண்ட நேரத்திற்கு பிறகு சிறிது மயக்கம் தெளிந்த லிங்குசாமி, திருப்பூரில் உள்ள மகனுக்கு செல்போன் மூலமாக தகவல் தெரிவித்து உள்ளார்.
அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆறுமுகம், உடனடியாக அருகில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் லிங்குசாமி வீட்டிற்கு சென்று பார்த்த போது இருவரும் மயக்கத்தில் இருப்பது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள சேமலைக்கவுண்டன் பாளையம், ஈரோடு மாவட்டத்தில் சிவகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தோட்டத்து வீடுகளில் தனியாக இருந்த முதிய தம்பதிகளை குறிவைத்து தாக்கி கொலை செய்து நகைகளை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அந்த வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்ட பின்னர் முதியவர்கள் நிம்மதியாக இருந்த நிலையில் எலத்தூரில் மீண்டும் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த முதியவர்களை குறிவைத்து தாக்கி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.