கோபிசெட்டிபாளையம் அருகே எருமை குட்டை பகுதியை ஒட்டி உள்ள வனப்பகுதியில் ஆண் யானை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.


கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் வன பகுதியானது புலிகள் காப்பக பகுதி என்பதால் ஏராளமான யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளது.

வன பகுதியில் உள்ள யானைகள் அவ்வப்போது உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.இந்நிலையில் பங்களாபுதூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. கல்லூரிக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரி அருகிலேயே விவசாய நிலமும் உள்ளது. விவசாய நிலம் மற்றும் கல்குவாரிக்குள் யானை உள்ளிட்ட வன விலங்குகள் புகுவதை தடுக்க மின்வேலி அமைத்துள்ளனர்.இந்த மின்வேலி அருகிலேயே உயர் அழுத்த மின் கம்பமும் உள்ளது. நேற்று இரவு அங்கு வந்த மக்னா யானை ஒன்று மின்வேலிகளை உடைத்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த டி.என்.பாளையம் வனத்துறைநினர் சம்பவ இடத்திற்கு சென்று யானை உயிரிழந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மின் வேலியில் சிக்கி யானை உயிரிழந்ததா அல்லது மரக்கிளையை உடைத்த போது உயர் அழுத்த மின் கம்பியில் சிக்கி உயிரிழந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த மாதம் இதே போன்று மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒரு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்து இருப்பது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.