கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அந்தியூர் வனசரகத்திற்குட்பட்ட கரும்பாறை என்ற இடத்தில் மின்சார வேலியில் சிக்கி சுமார் 20 வயதுடைய ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அந்தியூர் வன சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான யானை, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளது. வனப்பகுதியில் போதிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காத நிலையில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் வன எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தியும் வந்தது.

இதனால் யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தாமல் இருப்பதற்காக பெரும்பாலான விவசாய நிலங்கள் முழுவதும் மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த மின்சார வேலியையும் உடைத்து விட்டு யானைகள் உள்ளே வந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் ஒரு சில இடங்களில் விவசாயிகள் அந்த மின்வேலியில் உயர் அழுத்த மின்சார இணைப்பு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரும்பாறை பகுதியில் மட்டும் நாள்தோறும் 3 காட்டு யானைகள் மாலை 5 மணி முதல் அதிகாலை வரை சுற்றித்திரிந்து பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளது.நேற்று இரவு இதே போன்ற வந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று கரும்பாறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த மழை நீர் ஓடையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்த தகவல் அறிந்த அந்தியூர் வனத்துறையினர் மற்றும் கள்ளிப்பட்டி மின்வாரியத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று யானை உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து அரசு கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு இறந்த யானையை உடற்கூறு ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பிறகே யானையின் இறப்பிற்கான முழுமையான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்திருந்த நிலையில் மின்சார வேளையில் சிக்கி யானை உயிரிழந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.