

கோபி அருகே உள்ள ஒட்டர் கரட்டுப்பாளையம் கன்னிமார் கரட்டை சேர்ந்தவர் சுப்பையன் மகன் ரவிக்குமார் (47). விவசாயியான இவர், தோட்டத்தில் கோழிப்பண்ணை அமைத்து உள்ளார்.
இந்த பண்ணையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் 3,500 கோழி குஞ்சுகளை வளர்த்து வந்தார். நேற்று முன் தினம் இரவு இந்த கோழிப்பண்ணையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் அடுத்தடுத்து அமைக்கப்பட்டு இருந்த 3 கோழிப்பண்ணைகளும் முழுமையாக தீயில் எரிந்த நிலையில் பண்ணையில் இருந்த 3,500 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்தது. தீ விபத்தில் கோழிப்பண்ணையில் வைத்து இருந்த 30 மூட்டை கோழி தீவனம் என 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த கோபி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இதுகுறித்து தீயணைப்புத்துறையினர் நடத்திய விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனத்தெரிய வந்துள்ளது. தீ விபத்து குறித்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.