கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது, பவானி ஆற்றின் வழியாக அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி திடீரென கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.



கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணைக்கு விடுமுறை தினங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாக உள்ளது, இந்த நிலையில் காலை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு கொடிவேரி அணைக்கு வர நீர்வளத்துறை அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.


இதனால் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே குடும்பம் குடும்பமாக அணைக்கு வரத் தொடங்கினர்.



பவானி ஆற்றில் காலை முதல் 650 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகளை வெளியேறுமாறு நீர்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.


அதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடிவேரி அணைக்கு காலை முதலே வந்து அருவி போல கொட்டும் நீரில் குளிக்கும் அங்கு பொரித்த மீன்களை வாங்கி உண்டும், கடற்கரை போல கொட்டி கிடக்கும் மணல் மீது அமர்ந்தும் பொழுதை கழித்து வந்த சுற்றுலாப் பயணிகளை நீர்வளத் துறை அதிகாரிகள் உடனடியாக வெளியேறினர்.


இதனால் விடுமுறை தினத்தன்று சுற்றுலாவிற்காக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்


மேலும் பவானி ஆற்றில் அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் அணைக்கு வாராதவாறு அணையின் இரு புறமும் பங்களாபுதூர் மற்றும் கடத்தூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.