

எலத்தூர் குளத்தில் பறவைகள் காணலுடன் இயற்கை நடை
எலத்தூர் குளத்தில் பறவைகள் காணலுடன் இயற்கை நடை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.




ஈரோடு மாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு எலத்தூர் குளத்தில் இருந்த பல வகையான பறவைகள், தாவரங்கள், பூச்சிகள் ஆகியவைகளை நேரில் கண்டு சூழலியல் குறித்த கல்வி நேரில் பெற்று சென்றனர். குழந்தைகள், பெரியவர்கள், ஆசிரியர்கள் என பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


நிகழ்வின் தொடக்கத்தில் ஈரோடு மாவட்டத்தின் ஆறுகள் மலைத்தொடர்கள் மலைக்குன்றுகள் ஆகிய சூழல் அங்கங்கள் குறித்த சிறு அறிமுகம் வழங்கப்பட்டது. பின்னர் எலத்தூர் குளத்தின் சூழலியல் அமைப்பு, நீர் வழித்தடங்கள், குளத்தின் சூழலியல் முக்கியத்துவம், எலத்தூர் குளத்திற்கும் நாகமலை குன்றிற்கும் உள்ள உணவுச் சங்கிலி தொடர்பு ஆகியவைகள் குறித்த தகவல்கள் பகிரப்பட்டன..


இந்த நிகழ்வின் போது மத்திய ஆசிய பறவைகள் வழித்தடத்தில் ஐரோப்பிய, ரச்யா பகுதிகளில் இருந்து வலசை வந்திருந்த மண் கொத்திகள் (Sandpipers), கதிர் குருவிகள் (Warblers), மஞ்சள் வாலாட்டி (Yellow wagtail) இமயமலை மற்றும் வட இந்தியா பகுதிகளில் இருந்து வலசை வந்திருக்கும் நூற்றுக்கணக்கான நீலவால் பஞ்சுருட்டான் (Blue tailed bee eater), குயில்கள், ஆலாக்கல், வானில் ஆறு மாதங்கள் வரை தொடர்ந்து பறக்கக்கூடிய அரிதான அல்பைன் உழவாரன் (Alphine swift) உள்ளூர் பறவைகளான கொக்குகள், உழவாரன், நாரைகள், நெடுங்கால் உள்ளான், பட்டாணி உப்பு கொத்தி, தாழைக்கோழி, முக்குளிப்பான், வெள்ளை அன்றில் போன்ற 70க்கும் மேற்பட்ட பறவைகளை இந்நிகழ்வில் கலந்து கொண்டோர் நேரில் கண்டனர்.பிறகு குளக்கரையில் இருந்த துத்தி, துளசி, சிறுகண்பீளை, பெரும்பீளை, தும்பை, பொடுதலை, சாரணை, வெள்ளை எருக்கன் போன்ற பல தாவரங்கள் குறித்த அறிமுகமும் வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் அங்கு வளர்ந்திருந்த எருக்கன் செடி ஒன்றில் கும்பிடு பூச்சியானது (Praying Mantis) ஒரு குளவியை வேட்டையாடி உண்டு வந்ததை மக்கள் ஆர்வத்துடன் நேரில் கண்டனர்.
சூரியன் மறைய தொடங்கும் நேரத்தில் எலத்தூர் குளத்தின் மத்தியிலும் வட மேற்கு திசையில் உள்ள முட்புதர் காட்டிலும் இரவு தங்க வரும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல வகையான பறவைகளை நேரில் கண்டு ரசித்தனர்.
இதில் ஆயிரக்கணக்கான கொக்குகள், பஞ்சுருட்டான், நூற்றுக்கணக்கான சூறைக்குருவிகளும் உள்ளடங்கும்.நிகழ்வின் இறுதியில் கலந்து கொண்ட பொதுமக்கள் இடையே காலநிலை மாற்றம் குறித்த சிறு அறிமுகம் வழங்கப்பட்டது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தங்களால் என்னென்ன செய்ய முடியும் போன்ற தகவல்களும் பகிரப்பட்டன.




இந்த நிகழ்வை சூழல் அறிவோம் குழு மற்றும் எலத்தூர் பல்லுயிர் மேலாண்மை குழு ஆகியோர் இணைந்து முன்னெடுத்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்களது சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் சூழல் அங்கங்கள் குறித்த புது பார்வையும், ஒரு குளத்தின் வாழும் உயிரினங்கள் குறித்த பார்வையும், காலநிலை மாற்றம் குறித்த புரிதலும் ஏற்பட்டதாக கருத்துக்கள் தெரிவித்தனர். நமது சூழல் குறித்து அறிந்து கொள்வோம் இயன்ற வகையில் பாதுகாப்போம்