

எலத்தூர் குளம் மற்றும் நாகமலை குன்றில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் செயலாளர் கள ஆய்வு
568 உயிரினங்கள் வாழும் எலத்தூர் குளம் மற்றும் 422 உயிரினங்கள் வாழும் நாகமலைக் குன்று காடு ஆகியவற்றை
அங்குள்ள பல்லுயிர்களின் முக்கியத்துவம் சார்ந்தும் தொன்மையை பாதுகாக்கும் நோக்கிலும் கடந்த ஆண்டு சூழல் அறிவோம் குழுவினரால் உயிரிப்பல்வகைமை சட்டத்தின் கீழ் பல்லுயிர் பாரம்பரிய தளமாக (Biodiversity Heritage Site – BHS) அறிவிக்க அரசுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதன் நீட்சியாக ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அடுத்த கட்ட நிகழ்வாக முதன்மை தலைமை வனப்பாதுகாவலரும் தமிழ் நாடு உயிரிப்பல்வகைமை வாரிய செயலாளருமான விஜேந்திர சிங் மாலிக் இ.வ.ப. அவர்கள் தலைமையில் கள ஆய்வு நடைபெற்றது.

இக்கள ஆய்வின்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் தலைமை வனப் பாதுகாவலர் ராஜ்குமார் இ.வ.ப, ஈரோடு மாவட்ட வன அலுவலர் அப்பள நாயுடு இ.வ.ப, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் யோகேச் குலால் இ.வ.ப., உதவி வனப் பாதுகாவலர் லாவண்யா இ.வ.ப, ஆகியோர் உடன் இருந்தனர்.
எலத்தூர் குளத்தில் கள ஆய்வு தொடங்கியது. எலத்தூர் குளத்தின் சூழல் குறித்தும் பல்லுயிர்கள் பற்றியும் இவற்றை பாதுகாப்பது முக்கியத்துவம் குறித்தும் சூழல் அறிவோம் குழுவால் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் அங்கு நடப்பட்டுள்ள 130க்கும் மேற்பட்ட இயல் தாவரங்களை ஆய்வுக் குழுவினர் கவனத்தில் கொண்டனர்.
எலத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் ‘எலத்தூர் குளத்தின் பறவைகள்’ ஆவணப்படம் திரையிடப்பட்டது. கடந்த ஆண்டு சூழல் அறிவோம் குழுவின் வழிகாட்டலுடன் மறுசீரமைக்கப்பட்ட எலத்தூர் உயிரிப்பல்வகைமை மேலாண்மை குழுவின் செயல்பாடுகள் குறித்தும், குழுவினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும், சூழல் பாதுகாப்பில் மக்கள் பங்களிப்பு பற்றியும் எலத்தூர் உயிரிப்பல்வகைமை மேலாண்மை குழுவினரால் எடுத்துரைக்கப்பட்டது.
நாகமலை குன்றில் கள ஆய்வு தொடங்கியது. நாகமலை குன்றின் சூழல் குறித்தும் பல்லுயிர்கள் பற்றியும் குறிப்பாக அங்கு பத்து ஆண்டுகளாக இனப்பெருக்கம் செய்து வாழும் இராசாளி கழுகு, இடைவரை (Endemic) தேரை வகையான கந்தர் தேரை குறித்தும் அங்குள்ள தொல்லியல் சார்ந்த இடங்களையும் இவற்றை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
நாகமலை குன்றும் எலத்தூர் குளமும் எவ்வாறு ஒன்றோடு ஒன்று பல்லுயிர் உணவுச் சங்கிலி தொடர்பால் இணைக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
கள ஆய்வு நிறைவு பெற்றது.
வனத்துறையினரால் ஒருங்கிணைக்கப்பட்ட இக்கள ஆய்வில் சூழல் அறிவோம் குழுவினர், எலத்தூர் உயிரிப்பல்வகைமை மேலாண்மை குழு உறுப்பினர்கள், எலத்தூர் பேரூராட்சி தலைவர், எலத்தூர் பேரூராட்சி அலுவலர்கள், ஊர் மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த கள ஆய்விற்கு பிறகு இவ்விரு இடங்களும் தமிழக அரசால் விரைவில் பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துத்திருகின்றனர்.